திருவனந்தபுரம்

புதிய மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை கேரள அரசு குறைத்துள்ளது.

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த விதி மீறலுக்கான அபராதங்கள் மிகவும் அதிகமானது. இந்த அபராத உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதையொட்டி மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம் என்று அந்த மசோதாவில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது

இந்த அறிவிப்பின் அடிப்படையில் கேரள அரசு வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பாதியாக குறைத்துள்ளது.  ஏற்கனவே ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் வசூலிக்கப்பட்ட ரூ.1000 அபராதம்  பாதியாக குறைக்கப்பட்டு ரூ.500 அபராதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் ரூ.10 ஆயிரமாக இருந்த அபராத தொகை தற்போது ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டது.  அத்துடன் அதிக வேகமாக சென்றால் ரூ.5 ஆயிரமாக இருந்த அபராத தொகை தற்போது ரூ.1500- ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் வாகனம் செலுத்தும்  சிறுவர்களுக்கு விதிக்கப்படும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை குறைக்க கருணை காட்ட முடியாது என்று அறிவித்துள்ளது.