திருவனந்தபுரம்

கேரள அரசுப் பள்ளிகள் இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட  உள்ளன.

 

கேரளா மாநிலம் எப்போதுமே கல்விக்கு முதல் இடம் அளித்து வருவது தெரிந்ததே.   முழுமையாக எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம் என்னும் பெருமையை பல வருடங்களுக்கு முன்பே கேரளா பெற்றுள்ளது.   தொடர்ந்து கல்வியில் புரட்சிகள் செய்து வரும் கேரள அரசுக்கு தற்போது ஆளும் இடதுசாரி அணி மற்றொரு பெருமையை அளித்துள்ளது.

கேரள அரசுப் பள்ளிகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.  இந்தியாவில் இது முதல் முறையாகும்.    இதற்காக முதல் கட்டமாக 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மணவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.   இது அடுத்த கட்டமாக தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்த உள்ளது.

இதற்காக 59,722 மடிக்கணிகள், 43,422 புரொஜக்டர்கள்,  42,739 ஒலிபெருக்கிகள், 4578 காமிராகள், 4206 தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் 4576 வெப்காம்கள் ஆகியவை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அரசுரூ. 327.65 கோடி செலவு செய்துள்ளது.

மேலும் தொடக்கப் பள்ளிகளுக்காக 55,086 மடிக்கணினிகள், யு எஸ் பி ஸ்பீக்கர்கள், 22,170 மல்டி மீடியா உபகரணஙகளுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.   இந்த பொருட்கள் மூலம் 9941 அரசுப் பள்ளிகள் பயனடைய உள்ளது.   இவைகளுடன் 3248 தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் 5644 பிரிண்டர்களும் வழங்கப்பட உள்ளன.

”இது குறித்து எந்த ஒரு ஊடகமும் தெரிவிப்பதில்லை .  அரசுப் பள்ளிகள் மேம்பாட்டு பற்றி எந்த ஒரு வலதுசாரி இயக்கங்களும் வாயைக்கூட திறப்பதில்லை.   இதனால் அரசுப் பள்ளிகளில் கேரள அரசு நடத்தும்  புரட்சிகரமான மாறுதல்கள் இல்லை என ஆகிவிடாது” என் அரசு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.