சபரிமலை பெண்கள் தரிசனம் : புதிய பட்டியல் அளிக்க கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்

துவரை சபரிமலையில் 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக கேரள அரசு அளித்த பட்டியலில் முரண்பாடுகள் இருந்த்தால் புதிய பட்டியலை அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளது

சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் கடும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை அமுல்படுத்த கேரள அரசு மும்முரமாக ஈடுபட்டதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சபரிமலைக்கு பிந்து மற்றும் கனகதுர்க்கா ஆகிய இரு 40களில் உள்ள பெண்கள் தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

இதில் கனகதுர்க்கா என்னும் பெண்ணை அவரது மாமியார் தாக்கியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைக்கு ஆதரவாக கேரள அரசு இதுவரை 51 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தரிசனம் செய்ததாக உச்சநீதிமன்றத்திடம் பட்டியல் அளித்தது. உச்சநீதிமன்ற்ம் அது போல் பட்டியல் தேவை இல்லை எனக் கூறி அந்த பட்டியலை பரிசீலிக்கவில்லை.

கேரள அரசுக்கு இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உச்சநீதிமன்றத்திடம் தேவை இல்லாமல் பட்டியல் அளித்ததாக கண்டனம் தெரிவித்துள்ளன. அது மட்டுமின்றி அந்த பட்டியலில் ஏராளமான குழறுபடிகல் உள்ளதையும் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பட்டியலில் பல ஆண்களின் ஆதார் எண்களும் பல 51 வயதைத் தாண்டிய பெண்களின் பெயர்களும் இருந்துள்ளன.

இதை ஒட்டி கேரள அரசு அம்மாநில தலைமை காவல் அதிகாரி (டி ஜி பி) யிடம் விளக்கம் கேட்டுள்ளது. அந்த தவறான பதிவுகளை நீக்கி புதிய பட்டியல் ஒன்றை கேரள அரசு தயாரித்து வருகிறது. விரைவில் அந்த புதிய பட்டியலை மீண்டும் உச்சநீதிமன்றம் கேட்காமலேயே கேரள அரசு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி