திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளாவாகும். பின்னர் எடுக்கப்பட்டு துரிதமான சுகாதார நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் கடந்த சில வாரங்களாக கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும்  118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்,  மொத்தம் 2,912 பேர் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கேரளாவில் இதுவரை 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது வரை 1380 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடரும் கொரோனா பாதிப்பால் சுகாதார நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து சென்ற ஒரு காவல்துறை அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி வழக்கு விசாரணைகளை தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.

இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமானது, நீதிபதி மணிக்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கு விசாரணைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.