பாவ மன்னிப்பு பாலியல் விவகாரம்: பாதிரியர்களை கைது செய்ய கேரள உயர்நீதி மன்றம் பச்சைக்கொடி

திருவனந்தபுரம்:

பாவ மன்னிப்பு கேட்கச்சென்ற இளம்பெண்ணை  மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்ட பாதிரியார்களை கைது செய்யத் தடை இல்லை’ என்று கூறி முன்ஜாமின் வழங்க  கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலம் திருவல்லாவில், மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபையில்,மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண், தனது முந்தைய பாலியல் தவறுக்காக மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியார் ஜாப் மேத்யூவிடம் பாவ மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதையறிந்த அந்த பாதிரியார்,  இதுகுறித்து அவரது கணவரிடம் தெரிவிக்காமல் இருப்பதாக சொல்லி அந்த பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். இது அடுத்தடுத்து ஒவ்வொரு பாதிரியாரின் காதுகளுக்கு செல்ல அவர்களும் அந்த இளம் பெண்ணை தங்களது இச்சைகளுக்கு மிரட்டி ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

இதுகுறிந்த அந்த பெண்ணின் கணவர் புகார் கொடுத்ததை தொடர்ந்து கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் பி.மேத்யூ ஆகிய 4 பேர்மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிரியார்கள் ஜோப் மேத்யு, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோர் கேரள உயர்நீதி மன்றத்தில், இந்த வழக்கில் தங்களுக்கு  முன்ஜாமீன் வேண்டும் என்று  கேரள உயர் நீதி மன்றத் தில்  மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், கேரள உயர்நீதி மன்றம், இந்த பாலியல் வழக்கில்,  காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, முன்ஜாமின் தர மறுத்துவிட்டது.  மேலும், இந்த பாலியல் வழக்கில் அரசு எடுத்துள்ள மற்றும் எடுக்கப்போகும்  நடவடிக்கை குறித்து  நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்  என்று உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

இதன் காரணமாக புகாருக்கு ஆளான பாதிரியார்கள் 4 பேரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாதிரியார்கள் மீதான புகார் குறித்து தொடக்கத்தில் காவல்துறை புகார் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம்  தலையிட்டதின் பேரிலும், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், முன்னாள் முதல்வர்  அச்சுதானந்தன் மாநில டிஜிபிக்கு எழுதிய கடிதம் காரணமாகவும் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.