சபரிமலை விவகாரத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைப்பு: கேரள உயர்நீதி மன்றம்

திருவனந்தபுரம்:

ச்சநீதி மன்றம் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், சபரிமலை விவகாரத்தை கண்காணிக்க 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள்  கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கேரளாவில், தீர்ப்புக்கு எதிராக அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சில பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சித்ததால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டம் தடியடி என பதற்றமான சூழல் உருவானது. பலர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநில அரசு அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதித்தது.

சபரிமலையில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் குறித்த வழக்கு கேரள உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது, கேரள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதி மன்றம், சன்னிதானத்தில்  சரண கோஷம் போடலாம் என்றும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் நேற்றைய விசாரணையின்போது, சபரிமலை பகுதியில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் இலவச உணவு விநியோகம் மற்றும் பிரசாதம் விற்பனை செய்வது போன்ற வற்றிற்கு மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

சபரிமலை விவகாரத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.சிரி ஜகன், பி.ஆர்.ராமன் மற்றும் டி.ஜி.பி.  ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.