மேலதிகாரியுடன் தகராறு – யாரிடமும் சொல்லாமல் தமிழகம் வந்த கேரள இன்ஸ்பெக்டர்

கொச்சி: கேரளாவின் கொச்சி நகர காவல்துறையில் பணியாற்றும் நவாஸ் என்கிற சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட மோதலால், யாரிடமும் தகவல் அளிக்காமல், தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தனது மேலதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் நவாஸ். அதன் விளைவால் ஏற்பட்ட மன உளைச்சலால், தன் குடும்பத்தினருக்குக்கூட தெரிவிக்காமல் தமிழ்நாடு வந்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் நவாஸை, கரூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவரை, கேரளாவிற்கு அழைத்துச்செல்ல அம்மாநிலத்திலிருந்து ஒரு தனிப்படை புறப்பட்டுள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை காலையிலிருந்தே இவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

வயர்லெஸ் செட் தொடர்பாக, நவாஸின் மூத்த அதிகாரிக்கும், நவாஸுக்கும் வாக்குவாதம் நேர்ந்ததாக தெரிகிறது. நேர்மையான அதிகாரியான தன் கணவரை, சில பொய் வழக்குகளைப் பதியுமாறு மேலதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால்தான், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று புகார் கூறியுள்ளார் நவாஸின் மனைவி.