திருவனந்தபுரம்: கேரளா என்னை உத்வேகப்படுத்தியதோடு, ஆச்சரியமும் அளிக்கிறது என்று இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர் கூறி உள்ளார்.

கொரோனா வைரசால் ஜனவரி 20ம் தேதி சீனாவின் உகான் நகரம் மூடப்பட்டது. அந்த நகரத்துக்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சீன அரசின் இந்த அறிவிப்பால், உகானில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் குழு, அவசரமாக சொந்த நாட்டிற்கு பறந்தது. அவர்களில் உகானைச் சேர்ந்த 3ம் ஆண்டு மருத்துவ மாணவர் ஷாஹனாஸ் கொச்சிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் முழுமையாக பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. பின்னர் சளி, இருமல் வந்த போது, சுகாதார மையத்தில் இதுபற்றி தெரியப்படுத்தினார்.

பிறகு, திருச்சூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கப்பட்டார். நாட்டின் முதல் கொரோனா வைரஸ் நோயாளிஆவார்.

2,600க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கிய கொரோனாவில் இருந்து அவர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி இருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது;

மருத்துவமனையில் அனைத்து மருத்துவ ஊழியர்களும் சிறப்பாக செயல்படுவதை கண்டேன். நான் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, காவலர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை பெற்றிருந்தனர்.

தொற்றுநோய் மற்றும் சமூக சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு என்னை தனிமைப்படுத்தும் வார்டில் சிகிச்சை அளித்தது. அவர்கள் என்னிடம் அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர் என்றார்.

ஜனவரி 23ம் தேதி முதல் நான் கேரளாவில் இறங்கியபோது நான் பேசிய ஒவ்வொரு நபரின் விவரங்களையும் மருத்துவர்கள் பெற்றனர். எனது உறவினர்கள் உட்பட அவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டனர்.

உகானில் இருந்து நான் திரும்பியதிலிருந்து, மருத்துவர்கள் மற்றும் எனது பெற்றோரைத் தவிர வேறு எவரையும் நான் சந்திக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு, நான் வீட்டிற்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியிருக்கிறார்.