பெங்களூரு: நாட்டின் பெரிய மாநிலங்களிலேயே, கேரளாதான் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்றும், அந்தப் பட்டியலில் உத்திரப்பிரதேசம் கடைசியாக வருகிறது என்றும் தனியார் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகியவை, முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வருகின்றன.
நீடித்த வளர்ச்சி – சமபங்கு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை என்ற வகைப்பாடுகளின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பட்டியலின் கடைசி 3 இடங்களுள் இடம்பெறும் இதர 2 மாநிலங்கள் பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை.
அதேசமயம், சிறிய மாநிலங்கள் என்று வருகையில், சிறந்த நிர்வாகத்தில் கோவா முதலிடம் பெறுகிறது. யூனியன் பிரதேசம் என்று வருகையில் சண்டிகார் முதலிடம் வகிக்கிறது. சிறிய மாநிலங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் மேகாலயாவும், மூன்றாமிடத்தில் இமாச்சலப் பிரதேசமும் வருகின்றன.
இந்தப் பட்டியலில், கடந்தாண்டும் கேரளாதான் முதலிடம் பிடித்தது. அதேசமயம், கடந்தமுறையைவிட இம்முறை கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது அம்மாநிலம்.