மகாராஷ்டிரா : ரூ.10 கோடி மோசடி செய்த கேரள நகை வியாபாரிகள் தப்பி ஓட்டம்

தானே, மகாராஷ்டிரா

கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் சுனில் நாயர் மற்றும் சுதிர் நாயர் ரூ.10 கோடி மோசடி செய்து விட்டுத் தப்பி ஓடி உள்ளனர்.

 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதியான தானே என்னும் இடத்தில் குட்வின் என்னும் நகைக்கடை நிறுவனம் ஒன்று உள்ளது.  கடந்த 1992 ஆம் வருடம் சுனில் நாயர் மற்றும் சுதிர் நாயர் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் நகைக்கடை, உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வந்தது.   இந்த நிறுவனத்தின் கிளை நகைக்கடை ஒன்று டோம்பிவிலி பகுதியில் அமைந்துள்ளது.

 

இந்த கிளையில் பலரும் பணம் முதலீடு செய்துள்ளனர்.   இந்த முதலீடு முதிர்ச்சி அடைந்ததும்  அதற்கான நகைகளை தருவதாக நிறுவன உரிமையாளர்கள் வாக்களித்துள்ளனர்.    ஆனால் கடந்த சில நாட்களாக இந்தக் கடை திறக்கப்படாமல் உள்ளது.  இந்த குழுவின் வேறு நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

இதனால்  சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் 300 பேர் இணைந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.   இந்த நிறுவன உரிமையாளர்கள் முதலீடு செய்யப்பட்ட ரூ.10 கோடியை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது  காவல்துறையினர் இந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர்.  தலைமறைவான சகோதரர்கள் தேடப்பட்டு வருகின்றனர்

இதைத் தவிர இந்த நகைக்கடையில் சுமார் 500 பேர் நகைச்சீட்டு கட்டி உள்ளனர்.  அவர்களும் தங்கள் பணம்  திரும்பக் கிடைக்குமா என்னும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதைத் தவிர இந்த நிறுவனம் நகைகளைக் கொள்முதல் செய்தவர்களுக்கும் நிறைய பணம் பாக்கி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது