கொச்சின்:

கேரளாவில் உள்ள பூக்கொட்டுகாவு கிராமத்தை சேர்ந்த 300 பெண்கள் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க 190 கிணறுகளை தூர்வாரினர்.

கேரளா பாலக்காடு மாவட்டத்தின் வடபகுதியை சேர்ந்தது பூக்கொட்டுகாவு கிராமம். கடந்தாண்டு இங்கு போதிய மழை பெய்யவில்லை. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து பஞ்சாயத்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளை தூர்வாரி முறையாக பயன்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறை தீரும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து உறுப்பினர்களின் உதவி மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் சார்பில் கிணறுகளை தூர்வாரும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.

கிணறு தூர்வாரும் பணிகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபட்டனர். சில நாட்களிலேயே பெண்களை இந்த பணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது நாம் தானே என கருதிய 300 பெண்கள் தூர்வாரும் பணியை கூலி வாங்காமல் தொடர்ந்து செய்தனர். இதுவரை 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரியுள்ளனர். இவை அனைத்தும் 10 முதல் 12 மீட்டர் ஆழமான கிணறுகளாகும்.

இதுகுறித்து பூக்கொட்டுக்காவு கிராமத்தை சேர்ந்த வசந்தி கூறுகையில்,‘‘கிணற்றை தூர் வார எனக்கு தெரியாது. சில நாட்களில் கிடைத்த பயிற்சியை கொண்டு தொடர்ந்து படிப்படியாக செய்து வருகிறோம். பல பெண்களையும் இதில் ஈடுபடுத்தி வருகிறோம். எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

முதலில் ஒரு நாள் கூலியாக 240 ரூபாய் தந்தனர். ஆனால் கடந்த 7 மாதமாக ஒரு பைசா கூட வாங்காமல் செய்து வருகிறோம். நிலுவை தொகையை தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இனி தண்ணீர் பிரச்னை ஏற்படாது’’ என்றார்.