திருவனந்தபுரம் :

கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் இடதுசாரிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடைப்படையில், கணக்கிட்டால் கேரளாவில் மீண்டும் இடதுசாரிகளே ஆட்சிக்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் 41 முதல் 42 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளனர். அவர்கள் 101 சட்டசபை தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் அடைப்படையில் பார்த்தால், 101 தொகுதிகளில் இடதுசாரிகள் வெல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன்படி பார்த்தால் அந்த கூட்டணிக்கு 38 எம்.எல்.ஏ. தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க. கூட்டணி நேமம் என்ற ஒரு தொகுதியில் மட்டுமே ஜெயிக்கும் என அந்த கணிப்பு தெரிவிக்கிறது.

திருவனந்தபுரம், காசர்கோடு, மஞ்சேசுவரம், வட்டியூர்காடு, காழக்கோட்டம் ஆகிய ஐந்து இடங்களில் பா.ஜ.க.வுக்கு இரண்டாம் இடம் கிடைக்கும்.

– பா. பாரதி