திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக வரும் 8ம் தேதியும், 2ம் கட்டமாக டிசம்பர் 10ம் தேதியும்,  3ம் கட்டமாக டிசம்பர் 14ம் தேதியும் வாக்கு பதிவுகள் நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ம் தேதி நடக்கிறது.

தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து பதட்டமானவை என்று 1,850 வாக்குச் சாவடிகளை வகைப்படுத்தி உள்ளனர். அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 785 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் வெறும் 5 வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. 100க்கும் அதிகமான பதட்டமான வாக்குச்சாவடிகளை கொண்ட மாவட்டங்களாக திருவனந்தபுரம் (180), மலப்புரம் (100), கோழிக்கோடு (120), பாலக்காடு (182) மற்றும் காசர்கோடு (100), வயநாடு (152) உள்ளன. இதையடுத்து, இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வீடியோ எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.