நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம்

ரசின் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பாதிப்புக்குள்ளான விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு அளிக்கக் கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நம்பி நாராயணன் இஸ்ரோ அமைப்பில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.  கடந்த 1994 ஆம் வருடம் அவர் இஸ்ரோவின் பல முக்கிய விண்வெளி விவரங்களைப் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக இவர் மீது  புகார் எழுந்தது.   அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை உச்சநீதிமன்றம் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தது.

அவருக்குத் தேவையற்ற கைது, சிறைக் கொடுமை மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது   இதைத் தவிர தேசிய மனித உரிமை ஆணையம் அவருக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அத்துடன் கடந்த 2003 ஆம் வருடம் தமக்கு நம்பி நாராயணன் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.    இதையொட்டி கேரள மாநில முன்னாள் தலைமைச் செயலர் கே ஜெயக்குமார் இது குறித்து ஆய்வு செய்து கேரள அரசு நம்பி நாராயணனுக்கு ரூ. 1.3 கோடி நஷ்ட ஈடு வழங்கப் பரிந்துரை செய்தார்.

நேற்று நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் நம்பி நாராயணனுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.  விவாதத்தின் முடிவில் அவருக்குச் சட்ட விரோதமான கைது மற்றும் காவலில் நடந்த காவல்துறை கொடுமைகளுக்காக ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.