ஆலப்புழா: கேரளாவில் மசூதியில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த அஞ்சுவுக்கு, 2 சகோதரிகளும் இருக்கின்றனர்.

கணவரை இழந்து கஷ்டப்பட்டு வந்த அஞ்சுவின் தாய் பிந்து தனது மகள் திருமணத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என, செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை அணுகினார். அதனை பரிசீலித்த மசூதி நிர்வாகம், நிதி உதவி செய்ய சம்மத்தித்தது.

மசூதியிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதி தந்தது. அதனை தொடர்ந்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதையடுத்து செருவல்லி மசூதி வளாகம் திருமண மண்டபமாக மாறியது. இந்து மத சடங்குகளுடன் வாழை மரங்கள் நடப்பட்டு பந்தல் போடப்பட்டது. இந்து முறைப்படி குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டன.

இருமதத்தினரும் வாழ்த்த, அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார் சரத். திருமணத்துக்காக அஞ்சுவிற்கு, மசூதி நிர்வாகம் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாயும் பரிசாக தரப்பட்டது. திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சைவ உணவையும் மசூதி நிர்வாகமே வழங்கியது.

மதநல்லிணக்கத்துக்கு இலக்கணமான இந்த திருமணம் நாடு முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணத்தை பற்றி கேள்விப்பட்டவர்கள் எல்லாம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த திருமணம் குறித்து அறிந்த முதலமைச்சர் பினராயி விஜயன், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் தமது பேஸ்புக் பதிவில், மத நல்லிணக்கத்தின் அழகான உதாரணங்களை கேரளா எப்போதும் ஆதரித்து வருகிறது.

இன்று செருவல்லியில் எழுதப்பட்டது, இந்த மரபின் சமீபத்திய அத்தியாயம் என்று கூறி அந்த திருமண புகைப்படத்தையும் வெளியிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: மதத்தின் பெயரில் மக்களை பிரிக்க முயற்சிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், இத்தகைய தடைகளை நீக்க இந்த மக்கள் சமுதாயத்தை ஊக்குவித்து வருகின்றனர்.

கேரளா ஒன்றாகும், நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். தம்பதியினர், அவர்களது குடும்பங்கள் மற்றும் மசூதி நிர்வாகத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.