Random image

அரசு, தேவாலயம், காவல்துறை யாரும் உதவவில்லை : கன்னியாஸ்திரிகள் கண்ணீர்

கோட்டயம்

நேற்று கேரள அரசுக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் நடத்திய கூட்டத்தில் தங்களுக்கு அரசோ,தேவாலயமோ காவல்துறையோ யாரும் உதவவில்லை என தெரிவித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை ஜலந்தரை சேர்ந்த பேராயர் பிராங்கோ  இரு வருடங்களாக 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார்.    முதலில் அவரது புகார் மீது தேவாலயம் மற்றும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதன் பிறகு கடும் போராட்டத்துக்குப் பின் பேராயர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் நேற்று கோட்டயம் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.  அப்போது அந்த கன்னியாஸ்திரிகள் தங்களுக்கு ஆதரவாக அரசு, தேவாலயம் காவல்துறை உள்ளிட்ட யாரும் செயல்படவில்லை எனவும் எவ்வித உதவியும் அவர்கள் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, “எங்களுக்கு அரசு, காவல்துறை,  தேவாலயம் உள்ளிட யாரும் உதவப் போவதில்லை என நாங்கள் நிச்சயமாக தெரிந்துக் கொண்டோம்.  அதனால் நாங்கள் ஊடகங்களிடம் எங்கள் குறைகளை தெரிவிக்கிறோம்.  பேராயர் மீது பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம்.   புகார் அளித்து சுமார் 24 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.” என தெரிவித்துள்ளனர்.