”இந்தியாவில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு நாங்கள் உதவிக்கரம் நீட்டுவோம்” – ஐக்கிய அரபு நாடுகள்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக கமிட்டி ஒன்றை அமைக்க ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது. அந்த கமிட்டி மூலம் கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.

UAE

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த 10 நாட்களாக கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. வரலாறு காணத அளவில் மழை பொழிவதால் அணைகளில் நிரம்பி வழிய தொடங்கின. மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் ஏராளான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலசரிவுகளில் சிக்கியவர்களை மீட்க இந்திய ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளப்பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவிற்கு ரூ.500 கோடி நிதி அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் கேரளாவில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். வெள்ளப்பெருக்கத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகாவும் ஷேக் கூறினார்.

அவரது டிவிட்டர் பக்கதில் “ இந்த நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதியாக கேரள மாநிலம் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இந்தியாவில் வாழும் எங்கள் சகோதரர்கள் உதவ அரேபியர்கள் தவற மாட்டார்கள்.

ஐக்கிய அரபு நாடுகளில் வெற்றிகளில் கேரள மக்களின் பங்கும் உள்ளது. அவர்களுக்கு உதவதற்கும், ஆதரிப்பதற்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் கடைமைப்பட்டுள்ளோம் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கேரள மக்களுக்கு உதவுவதற்காக தேசிய அவசர குழு ஒன்றை அமைக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளது.