பிடித்த காட்சிகளை புகைப்பட சாட்சிகளாய் மாற்றும் டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள் உங்கள் பத்திரிகை.காம் இணைய தளத்தில் தினசரி ஒன்று விதமாக வெளியாக உள்ளது.  புகைப்படங்கள் குறித்து வாசகர்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகிறது.

கடந்த 11 வருடங்களாக, இந்திய நாட்டின் பல பகுதிகளில் தன் கேமராவுடன் வலம் வரும் டிப்பின் அகஸ்டினுடன் ஒரு சின்ன உரையாடல்.

“சில சமயங்களில் வழி தெரியாமல் தொலைந்து போயிருக்கிறேன். பல நேரங்களில் பஸ், ரெயில் நிறுத்தங்களில் தான் உறக்கமே. படு சுவாரசியமான வாழ்க்கை,” என்று உற்சாகமாக தொடங்குகிறார் டிப்பின்.

சுமார் 21 இந்திய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் டிப்பின், தான் கண்ட அற்புதமான உலகத்தை தன் கேமராவில் அழகாக பதிவு செய்திருப்பது தான் ‘ஹைலைட்’. கொச்சியில் உள்ள தர்பார் ஹால் கலைக் கூடத்தில் இவர் எடுத்த 75 புகைப்படங்களின் கண்காட்சி தற்போது நடைப்பெற்று வருகிறது. கிடைக்கும்  வரவேற்பிலும் , குவிந்து வரும் பாராட்டுகளிலும்  மனிதர்  மிரண்டு போயிருக்கிறார்.

“இந்த அளவுக்கு அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ” என நெகிழும்  டிபினின் புகைப்படங்கள் இயற்கை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மையமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.

“பயணம் செய்வது எனக்கு சுவாசிப்பது போல்,” என்று கவிதையாக பேசும் டிப்பின், தன் பயண அனுபவங்களை கேரள பத்திரிகைகள் மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதை தவிர blog (https://dipstravel.blogspot.com) ஒன்றும் எழுதுகிறார்.

மனதிற்குப்  பிடித்த காட்சிகளை புகைப்பட சாட்சிகளாய் மற்றும் ரசதந்திரம் இவருக்கு கை வந்த கலை.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த டிப்பின், ஒரு ஆன்லைன் ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரம் ப்ரெஸ் கிளப் நடத்திய ‘போட்டோ-ஜர்னலிசம்’ பயிற்சி தான், டிப்பின் தன் திறமையை தானே அடையாளம் கண்டுக்கொள்ள பெருமளவில் உதவியது என்றால் அது மிகையாகாது.

மறக்க முடியாத அனுபவம் ஏதாவது…என்று தொடங்கும்போதே புல்லட் வேகத்தில் பதில் வருகிறது. “உத்தர பிரதேச மாநிலத்தில் ப்ரயாகில் நடந்த கும்பமேளாவில் இந்த வருடம் பங்கெடுக்க சென்றேன். அங்கு சன்யாசிகளுடன் அவர்களுடைய குடில்களில் தங்கி இருந்தேன். சர்வ சாதாரணமாக பாம்புகள் நடமாடும் இடம் அது. உள்ளே கொஞ்சம் உதைப்பாகத்தான் இருந்தது,” என்று சரளமாக சிரிக்கிறார் டிப்பின்.

துடிப்பான இந்த புகைப்பட கலைஞன் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!