திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் காலையில் நடைபெறும்  அசெம்பிளியில் அரசியல் அமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட வேண்டும் என்று கேரளா முதல்வர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

மத்தியஅரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளாவிலும் முதல்வர் பினராயி தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கேரள சட்டமன்றத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்,  கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் காலை நடைபெறும் பிராத்தனையின்போது, அரசியல் அமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

மாணவர்களின் அரசியலமைப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble of the Constitution of India)

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையானது பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது அதில் திருத்தம் 42 ன் மூலம் 1976 ஆம் ஆண்டு சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

”இந்தியாவின் குடிமக்களாகிய நாங்கள் இதன் மூலம் கண்ணியத்துடன் வலியுறுத்தி இந்தியாவின் இறையாண்மையை சமூக சமத்துவத்துடன் கூடிய மத சார்பற்ற ஜனநாயக குடியரசாக உருவாக்க உறுதி பூணுவதோடு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, சமூகநீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் சார்ந்த நீதியுடனும் சிந்தனை செய்தலில் வெளிப்படுத்துதலில் நம்பிக்கையில் மற்றும் மதவழிபாடுகளில் சுதந்திரத்துடனும், எல்லோருக்கும் சம அந்தஸ்து மற்றும் சமவாய்ப்புடனும் மற்றும் தனிமனித கண்ணியத்துடன் கூடிய சகோதரத்துவத்துடன் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும் பாதுகாப்போம் என்றும் உறுதியுடன் தீர்மானிக்கிறோம். இந்திய மக்களாகிய நாம் நீதி, சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமதர்ம சமயசார்பற்ற ஒருமைப்பாடுடைய குடியாட்சியை நிறுவுகிறோம். இதில் உள்ள நான்கு முக்கிய அடிப்படைகளும் கீழ்க்கண்டவாறு விரித்துரைக்கப்பட்டுள்ளன.

நீதி ( Justice )

சமூக, பொருளாதார, அரசியல் தொடர்பானவை. சமூகம் பல்வேறு பிரிவு மக்களையும் குழுக்களையும் கொண்டது. தனிநபர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதோடு, சமூகத்தேவைகளும் முன்னேற்றமும் கருத்தில் கொள்ள பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படுதலைப் குறிப்பதே நீதி, அவை மூவகைப்படும், அவையாவன.

சமூகநீதி (Social Justice )

சாதி, மதம், இனம், பால் அடிப்படையாக வேறுபடுத்துவதை அரசியலமைப்புத் தடை செய்கிறது ஆனால், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள குடிமக்களின் முன்னேற்றத்திற்காக, அரசு வழிவகை செய்ய வேண்டும்.

பொருளாதார நீதி (Economic Justice)

அரசியலமைப்பில் தோற்றுவாயில் உறுதியளிக்கப்பட்டுள்ள, நியாயமான பொருளியல் முறைமையை உருவாக்குவதே நெறிசெய் கோட்பாடுகள், குறிக்கோளாகக் கொண்டுள்ளன. பொருளாதார நீதி என்றால் ஒவ்வொருவரின் கண்ணீரைத் துடைப்பதே என்று நீதிபதி கிருஷ்ண ஐயர் அவர்கள் கூறியுள்ளார்.

அரசியல் நீதி (Political Justice)

சமூகத்தில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடவும், கருத்துக்களை தெரிவிப்பதற்கும், சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஈடுபடவும் அனைவருக்குமான சமத்துவத்தை அரசியல் சார்ந்த நீதி அளிக்கிறது.

இதுபோல் சமூகத்தில் நலிவுற்ற மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையில் சில சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நலிவுற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களின் குரல் அரசியல் அரங்கத்தில் ஒலிக்கிறது.

சுதந்திரம் (Freedom)

சிந்தனை, பேச்சு, எழுத்து, நம்பிக்கை, மற்றும் வழிபாடு தொடர்பானவை. சுதந்திரத்தைப் பற்றித் தோற்றுவாய் குறிப்பிடுகின்றது. சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, எப்பொருள் பற்றியும் பேச எழுதுவதற்கான உரிமையே ஆகும். சிந்தனை கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. தன்னிறைவிற்கும், குடியரசு ஆட்சி திறம்பட நடைபெற இத்தகைய உரிமை மிகவும் அவசியமாகும். ஒரு மனிதருக்கு மதத்திலும், மனசாட்சிப்படி நடக்கவும் சுதந்திரம் தேவை. அரசு எல்லா மதங்களுக்கும் சமமான சுதந்திரத்தைக் கொடுக்கின்றது.

சகோதரத்துவம் Fraternity)

இது, தனிமனிதனது கண்ணியத்தையும் (Dignity) நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதாகும். தாய், தந்தை, மனைவியைத் தவிர அனைவரையும் உடன் பிறப்புக்களாகக் கருதும் மனப்பான்மையை தோற்றுவித்து, வேற்றுமைகளில் ஒற்றுமையைக் காணுதல் (Unity in Diversity) என்றும் உயரிய பண்பினை மாணவர்களிடம் வளர்த்தல் வேண்டும் இதன் மூலமே சமுதாயப்பிணக்குகள் இன்றி, அனைவரும் இணக்கமாக செயல்பட்டு ஜனநாயகத்திற்கு வலுசேர்க்க முடியும்.

தனிமனிதனின் கண்ணியத்தையும் (Dignity) நாட்டின் ஒற்றமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வது தொடர்பானவை.

சமத்துவம் ( Equality )

சமூக அந்தஸ்து மற்றும் வாய்ப்புகள் அவற்றை மேம்படுத்துவது தொடர்பானவை.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதே சமத்துவமாகும். சமமானவர்களிடம் உள்ள சமத்துவத்தையே இது குறிக்கிறது. அரசர்களுக்கும், பாமர மக்களுக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியாது. இவர்களுக்கிடையே வேறுபாடு காண்பது அரசியலமைப்பை மீறுவது ஆகாது. இதனால்தான் குடியாட்சியானது பெண்கள், குழந்தைகள், பிற்பட்டவர் ஆகியோருக்குச் சிறப்பு சலுகைகள் அளிக்கிறது.

மதச்சார்பின்மை (Secularism)

இந்தியாவிலுள்ள அனைவரும் தங்களது மதங்களை அவரவர் வழிபாட்டுக்கு இடையூறு இன்றி பின்பற்றலாம். எல்லா மதங்களும் சம மரியாதையுடன் நடத்தப்படுகிறது. மேலும் ஒருவரது மதத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.

வழிபாட்டுக் கூடங்களை எங்கும் அமைத்துக் கொண்டு வழிபடலாம். அரசு ஒருவரின் மத நம்பிக்கையில் தலையிடாது.

இதுகுறித்து மாணவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரசியல் அமைப்பின் முன்னுரையை வாசிக்க மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.