திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள இரண்டு  லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் தாக்கிய ஒகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே போல கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மீன்பிடிப்புக்காக ஆழ்கடல் பகுதிக்குச் சென்ற சென்ற மீனவர்கள் பலர், கரை திரும்பவில்லை. சிலர் பிணமாக மீட்கப்பட்டனர். இன்னும் பலர் பற்றிய தகவல் இல்லை.

இது போன்ற சூழ்நிலை ஏற்படும்போது, மீனவர்களின் குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றன.. அவர்களுக்கு உதவும் வகையில், கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து ‘Group Accident Insurance’ என்னும் காப்பீட்டுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், 18-70 வயதில் இருக்கும் மீனவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  மீன்பிடிக்கும்போது காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை அளிக்கப்படும்.  விபத்து, இயற்கைப் பேரிடர்களில் உயிரிழக்கும் மீனவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.

இன்று குமரி மீனவர்களின் சோகத்தைப் பார்வையிட பிரதமர் மோடி வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்களுக்கும் இதே போன்ற திட்டம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது.