பொன். ராதாகிருஷ்ணனை மீண்டும் தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை

பரிமலை செல்லும்போது கேரள காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திரும்பும்போது  கேரள காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து இந்துத்துவ ஆதரவாளர்கள் சிலர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதனால் சபரிமலை பகுதியில் காவல்துறை கட்டுப்பாடுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில் ஒன்று, பக்தர்கள் தங்கள்  வாகனங்களை நிலக்கல் பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் செல்ல வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது ஆதரவாளர்களுடன் சில கார்களில் சபரிமலை வந்தார். அவரது ஆதரளவாளர்களின் கார்களை   கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த எஸ்.பி. யதீஸ்சந்திரா, அமைச்சரின் கார் மட்டும் பம்பை வரை  செல்லலாம் என்றும், அவரது ஆதரவாளர்கள் அரசுப்பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதை எதிர்த்து பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குவாதம் செய்தார். ஆனால் எஸ்.பி. ஒப்புக்கொள்ளவில்லை.இறுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும் அரசுப்பேருந்தில் பம்பை சென்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது..

பம்பையில் இருந்து சன்னிதானம் சென்ற பொன். ராதாகிருஷ்ணன் அங்கு அய்யப்பனை தரிசித்தார். அப்போது பக்திப்பெருக்கில் அய்யப்பனை பார்த்து   குலுங்கி குலுங்கி அழுதார். கோவில் நடை அடைக்கும் வரை சன்னிதானத்தில் இருந்தார். பின்பு ஆதரவாளர்களுடன் பம்பை திரும்பினார். அங்கிருந்து தனியார் காரில் கோவை புறப்பட்டார்.

பொன். ராதாகிருஷ்ணனுடன் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் மூன்று கார்களில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அதிகாலை ஒரு மணியளவில் பொன். ராதாகிருஷ்ணனுடன் சென்றவர்களின் கார்களை எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையிலான காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்ததும் பொன். ராதாகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்தார். தனது ஆதரவாளர்களின் காரை தடுத்து நிறுத்தியது ஏன்? என்று எஸ்.பி.யிடம் கேட்டார். அதற்கு எஸ்.பி. ஹரிசங்கர், சபரிமலை பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைபெறும் வழக்கமான வாகன பரிசோதனை இது என்றும், இவர்கள் மத்திய மந்திரியுடன் வந்தவர்கள் என தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பொன். ராதாகிருஷ்ணன், அதனை கடிதமாக எழுதித் தரும்படி கூறினார். இதையடுத்து எஸ்.பி. ஹரிசங்கர், சம்பவம் குறித்து விளக்கம் அளித்து கடிதம் அளித்தார்.

பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் கேரள காவல்துறையினால் தடுத்து நிறுத்தப்பட்டது திட்டமிட்ட செயல் என்று கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தினர்.

#Sabarimala #PonRadhakrishnan #BJP #kerala #police