சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 200பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு

திருவனந்தபுரம்:

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளப்பி உள்ள நிலையில், நேற்று கவிதா மற்றும் ரெஹானா என்ற இரு இளம்பெண்கள் சன்னிதானத்திற்குள் காவல்துறையினர் பாதுகாப்புடன் நுழைய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை உள்ளே நுழைய விடாதவாறு ஆயிரக்கணக்கில் அய்யப்ப பக்தர்கள் திரண்டு வந்து கோஷமிட்டு தடுத்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. இதைதொடர்ந்து பாதுகாப்பு  கருதி இரு பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில்,  சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலைக்கு அனைத்துவயது பெண்களும் போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று இறுதியில் இந்து அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் பாதி வழியில் திரும்பினர். போலீசார் பாதுகாப்பில் சென்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டக்காரர்கள் பெண்களை உள்ளே அனுமதிக்காமல் அந்த இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி அவர்களை திரும்பி செல்ல வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் பாதுகாப்பு கருதி நிலக்கல் பம்பா போன்ற  பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சபரிமலை கோவில் வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.