திருவனந்தபுரம்:

கேரளாவில் சமீப காலமாக நடந்து வரும் அரசியல் வன்முறை குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் பினராய் விஜயன் இன்று பேசுகையில், ‘‘ மருத்துவ கல்லூரியில் நடந்துள்ள ஊழலில் பாஜ முக்கிய தலைவர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது. இதில் இருந்த மக்களின் கவனத்தை திசை திருப்ப வன்முறை சம்பவங்கள் நடத்தப்படுகிறது’’ என்றார்.

pinaray

மேலும், அவர் பேசுகையில், ‘‘ மாநிலத்தில் பல இடங்களில் பாஜ வன்முறையில் ஈடுபடுவது உளவுத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

தேவைப்பட்டால் இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு தயாராக உள்ளது. ஊழல் தொடர்பாக பாஜ தயாரித்துள்ள அறிக்கையை மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள்’’ என்றார்.

முன்னதாக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் பினராய் விஜயன் பேசுகையில், ‘‘மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதனால் மாநிலத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தவறான பிரச்சாரங்களால் மாநிலத்துக்கு வர வேண்டிய முதலீடு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும்’’ என்றார்.

‘‘மாநிலத்தில் வன்முறை பரவ சமூக வளைதளங்கள் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை குற்றவாளிகளாக பார்க்க வேண்டும். கட்சி சார்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சிபிஎம், காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கேரளாவில் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ராஜேஷ் எடவகோட் வீட்டிற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறைகள் நடக்கிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் காட்டுமிராண்டித் தனமாக கொலை செய்யப்படுகின்றனர்’’ என்றார்.

ராஜேஷ் கடந்த 29ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.