பாவமன்னிப்பு தடை செய்ய கேரள பாதிரியார்கள் சங்கம் எதிர்ப்பு

திருவனந்தபுரம்

கேரள பாதிரியார்கள் சங்கம் பாவ மன்னிப்புக்கு தடை செய்யக் கூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

கேரளாவில் பட்டினம்திட்டா மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை பாதிரியார் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.    அந்த வீடியோவை சக பாதிரியார்களுக்கு அனுப்பியதில் மேலும் 4 பாதிரியார்கள் அந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டார்.   அதைத் தொடர்ந்து பாவமனீப்பு கேட்கும் பெண்களை மிரட்ட மிகவும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனால்  பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரையை கேரள பாதிரியார்கள் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.  அந்த சங்கத் தலைவர் சூசை பாக்கியம், “இவ்வாறு பாவமன்னிப்பை தடை செய்வது மத நம்பிக்கையில் குறுக்கிடும் செயல் ஆகும்.   இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டது தேவையில்லாத ஒன்றாகும்.  இந்த பரிந்துரையை ஏற்கக்கூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.