நடிகர் ஷேன் நிகம், ஷூட்டிங் தளத்தில் போதை மருந்து உட்கொண்டு பிரச்சினை செய்ததால் அவரை இனி எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
மேலும் ஷேன் நிகத்தை மலையாள சினிமாவில் தடை செய்வதாகவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இதனால் தயாரிப்பில் இருக்கும் வெயில் மற்றும் குர்பானி என இரண்டு படங்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷேன் நிகம் 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிர்பந்தித்துள்ளது.

ஷேன் நிகமை தமிழில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தனர் . ஆனால் எந்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஷேன் நிகமை நடிக்க அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மலையாள திரைப்பட வர்த்தக சபை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் ஷேன் நிகம் தான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர் என்று தனது முகநூல் பக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார்.

ஆனால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்று மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபு தெரிவித்துள்ளார். ஷேன் நிகம் பிரச்சினை குறித்து வருகிற 22-ந்தேதி நடக்கும் நடிகர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.