கேரளாவில் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைப்பு…!

திருவனந்தபுரம்: கேரளா வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொடர்பான விதிமுறைகளில் கேரள அரசானது, அதிக தளர்வுகளை தற்போது கொண்டு வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள்  உள்ளிட்ட அரசு அலுவலகங்களை 100 சதவீதம் வருகையுடன் செயல்பட அரசு இப்போது அனுமதித்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக தலைமை செயலகம் மற்றும் பிற அரசு அலுவலகங்களின் பணிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், உள்நாட்டு பயணிகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தல் காலம் ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 14 நாள் தனிமைப்படுத்தல் அறிவுறுத்தப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை என்று அரசு கூறியுள்ளது.

தொடக்கத்தில், கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலம் 28 நாட்கள் ஆகும், பின்னர் இது 14 நாட்களுக்கு குறைக்கப்பட்டு இருந்தது. ஹோட்டல் மற்றும் உணவகங்களில் உள்ளக உணவருந்தவும் இந்த உத்தரவில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.