கேரளாவில் பேட்டரி பேருந்துகள் அறிமுகம்….3 நகரங்களில் இயக்க திட்டம்

திருவனந்தபுரம்:

சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையில் கேரளா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பேட்டரி பேருந்தை கேரள அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் டொமின் தச்சன்காரி திருவனந்தபுரத்தில் இந்த பேருந்தை இன்று தொடங்கி வைத்தார்.

5 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை இயக்க முடியும். குளிர் சாதன வசதி கொண்ட இந்த பேருந்தில் 35 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி-திறக்கும் வசதிகள் என பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர நாற்காலியுடன் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர், கழிவறை, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி என நவீன வசதி கொண்ட சொகுசு பேருந்தாகும். இந்த திட்டம் வெற்றி பெற்றால் இதர டீசல் பேருந்துகளும் பேட்டரி பேருந்தகளாக மாற்ற கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோழிக்கோடு, கொச்சி நகரங்களில் பேட்டரி பேருந்துகள் ஒடத் தொடங்கும்.

போக்குவரத்துதுறை அமைச்சர் டோமின் தஞ்சன்காரி கூறுகையில் ‘‘சோதனை அடிப்படையில் இந்த பேருந்தை இயக்கியுள்ளோம். அடுத்த 6 மாதங்களுக்குள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் 300 பேருந்துகளை இயக்கவுள்ளோம். குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் டீசல் பேருந்துகள் முதல்கட்டமாக மாற்றப்பட்டு பேட்டரி பேருந்துகளாக இயக்கப்படும்’’ எனக்கூறினார்.

இந்தியாவில் இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 6வது மாநிலமாக கேரளாவிலும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.