Random image

’’ஜாதியை சொன்னாதான் சீட்டு… கேரள பள்ளியின் அடாவடி

கேரள மாநிலத்தில் இன உணர்வுகள் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு.

அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள் என மேல் தளத்தில் இருக்கும் ஆளுமைகள் பலரும் நாயர், மேனன் என தங்கள் அடையாளங்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது தவறுவதில்லை.

அந்த கடவுளின் தேசத்தில் தன் மகனின் ஜாதியை பள்ளிக்கூட விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்க மறுத்த தந்தை –தனது மகனை பள்ளியில் சேர்க்க முடியாத அவல நிலைக்கு ஆளாகியுள்ளார்.

செய்தி இது தான்.
அங்குள்ள பட்டோம் என்ற இடத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த நசீம் – தான்யா தம்பதியர் தங்கள் மகனை அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்க விரும்பினர்.
பள்ளி நிர்வாகம் அளித்த விண்ணப்ப படிவத்தில் , ஜாதி மற்றும் மதம் என்று இருந்த பத்தியை மட்டும் அவர்கள் நிரப்ப மறுத்து விட்டனர்.
‘’ஜாதி- மத எல்லைகளை தாண்டி எங்கள் மகனை வளர்க்க விரும்புகிறோம்.அதனால் தான் எங்கள் ஜாதியை நாங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை’’ என்கிறார், நசீம்.

’’ஜாதி பெயரை குறிப்பிடாவிட்டால் சீட் கிடையாது’’ என்று கூறி அந்த பெற்றோரை திருப்பி அனுப்பி , பள்ளிக்கதவை சாத்தி விட்டது பள்ளி நிர்வாகம்.

இது குறித்து விசாரணை நடத்த அங்குள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி அறிவில் நாங்கள் எங்கோ போய்விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் கேரளாவில்தான் இந்த கொடுமை

-ஏழுமலை வெங்கடேசன்