சபரிமலை கோவில் நடை திறப்பு: மீண்டும் 144 தடை அறிவிப்பு

பம்பா:

பரிமலை கோவில் நடை திறக்க உள்ளதால், அந்த பகுதியில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஐப்பசி மாத பூஜையின்போது  இளம்பெண்கள் வர முயற்சி செய்ததால், மாநிலம் முழுவரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து,   சபரிமலை பகுதிகளான பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவங்கல், பந்ததனம்திட்டா போன்ற பகுதிகளுக்கு  144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது, தீபாவளி பூஜைக்காக 4ந்தேதி முதல் 6ந்தேதி வரை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.  இதையடுத்து, மீண்டும் கேரளாவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை கோவிலில் வருகிற 5-ம் தேதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையைச்  சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

சபரிமலை கோவிலுக்கு வரும் இளம்பெண்களுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல தீர்மானித்தனர். ஆனால், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வந்தன.  உச்சநீதி மன்ற தீர்ப்பை மேற்கோள்  காட்டி சில பெண்கள் சபரிமலை வர முயற்சி செய்தனர். அவர்கள்   பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.