சென்னை:

கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை ஐஐடியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப்(18) என்ற மாணவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு பேராசிரியர்கள்தான் காரணம் என மாணவி பாத்திமா கடிதம் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாத்திமாவின் பெற்றோர், தங்களது மகள் தற்கொலையில் மர்மம் உள்ளது என்று கொடுத்த புகாரைத்தொடர்ந்து,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் சென்று, சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், ஐஐடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்த நிலையில், மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் சென்னை ஐஐடி வளாகம் முன்பாக நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் மாணவி பாத்திமாவை சேர்ந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.