சென்னை ஐஐடி-யில் கேரள மாணவர் தற்கொலை: பரபரப்பு

--

சென்னை:

கிண்டியில் உள்ள ஐஐடி-யில் கேரள மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மாணவரான ஷாஹித் குர்முத் என்பவர், சென்னை ஐஐடியில் பெருங்கடல் பொறியியல்  5 ஆண்டு பட்டப்படிப்பை பயின்று வந்தார். ஐஐடி வளாகத்தில்  உள்ள ஜமுனா விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டூர்புரம்  காவல்துறையினர் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும்  விசாரித்து வருகின்றனர்.

ஷாஹித்தின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சென்னை விரைவதாகவும் கூறப்படுகிறது.

ஷாஹித் தற்கொலை குறித்த  முதல்கட்ட விசாரணையில் ஷாஹித் தனது குடும்பப் பிரச்சனை  தனது பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் தொலைபேசியில் சண்டையிட்டு வந்துள்ளார்.  நேற்று இரவும் ஷாஹித் மனவருத்தத்துடன் காணப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நள்ளிரவில் ஷாஹித் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலை குறித்து எந்தவித காரணத்தை ஷாஹித் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது உடமைகளை சோதனையிட்ட காவல்துறையினர்  இந்த தகவலை தெரிவித்து உள்ளனர்.