கேரளா: வெள்ள நிவாரணத்துக்கு அனைத்து ஆடைகளையும் வழங்கிய வியாபாரி

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெய்த கன மழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரழிவு கேரளாவையை தலைகீழாக புரட்டி போட்டது. கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் நாடு முழுவதிலும் இருந்து குவிந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வெள்ள பாதிக்காத பகுதிகளில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்பெட்டா பகுதியில் ‘கல்பட்டா ரெடிமேட்’’ என்ற கடை நடத்தி வருபவர் பைசல். இவரிடம் நிவாரண உதவியாக சில ஆடைகளை வழங்குமாறு தன்னார்வலர்கள் கேட்டுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில்,‘‘ ஏன் சில ஆடைகள் மட்டும் கேட்கிறீர்கள். இந்த கடையில் விற்பனைக்காக உள்ள அனைத்து ஆடைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறி கடையை ஒப்படைத்தார்.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரபல நிறுவனங்களிலும் ஆடைகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு கேரளாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலை தளங்களில் இந்த தகவல் புகைப்படத்துடன் பரவி வருகிறது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.