கேரளா: நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை வழங்கிய மாணவி

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக பிளஸ்-1 மாணவி வழங்கி உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கேரள மக்களுக்காக அனைவரம் உதவிக்கரம் நீட்டிய நிலையில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனக்கு சொந்தமான நிலத்தை வழங்கி உள்ளார்.

keralarains

வரலாறு காணாத கனமழையினால் கேரளா மாநிலம் முழுவதும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியது. கிட்டத்தட்ட 13 மாவட்டங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. 350க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். ஆயிரக்கணகானோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. லட்சத்திற்கு மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்துள்ளதால் திறந்து விடப்பட்டுள்ளன.

50 ஆண்டுகள் இல்லாத வகையில் இத்தகைய பேரிழப்பை கேரள மாநிலம் சந்தித்துள்ளதால் அனைவரது உதவிகளையும் நாடியுள்ளது. கேரளா மக்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

fund

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் பகுதியை சேர்ந்த சங்கரனின் மகள் ஸ்வகா தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு குறித்து அறிந்த ஸ்வகா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய எண்ணினார். இதையடுத்து, தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்தார். இது குறித்து கேரள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார்.

ஸ்வகாவின் கடித்தத்தை பார்த்த பினராயி விஜயன் மன நெகிழ்ச்சியடைந்து பாராட்டினார். நிவாரணத்தை கண்ணூர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும்படியும் அவர் கூறினார். இதையடுத்து தனக்கு சொந்தமான நிலத்தை நிவாரண பணிக்காக ஆட்சியரிடம் ஸ்வகா அளித்தார். மாணவிக்கு சொந்தமான நிலம் தற்போது ரூ.2 கோடி வரை விலை போகக்கூடியது என ரியல் எஸ்டேட் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.