கேரளாவில் நிஸ்ஸான் கார் நிறுவனம்….சாத்தியமானது எப்படி?

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் என்றாலே முழு கடையடைப்பு போராட்டத்திற்கு புகழ் பெற்ற மாநிலமாகும். கடந்த ஆண்டில் மட்டும் நூறு கடையடைப்பு போராட்டம் நடந்துள்ளது. இதன் காரணமாக கேரளா தொழில் புரிய உகந்த இடம் இல்லை என்ற பெயரை பெற்றுள்ளது.

கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த ‘ஆரக்கிள் கார்ப்’ என்ற பன்னாட்டு நிறுவனம் தான் கேரளாவுக்கு வந்தது. அதன் பின்னர் ஒரு நிறுவனங்கள் கூட கேரளாவுக்கு வரவில்லை. அதற்கு முன்பே சுற்றுசூழல் காரணமாக மைக்ரோசாப்ட் கார்ப், கோகோ கோலா நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறின.

ஆனால், கேரளாவை தற்போது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது. உலகளவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் நிஸ்ஸான் கேரளாவில் ஆராய்ச்சி மையத்தை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கு ஆளுங் கட்சி சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக 3 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக ஆயிரகணக்கானோருக்கும் இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் டிரைவரில்லா கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது சர்வேச அளவிலான ஆராய்ச்சி மையமாக திகழவுள்ளது. இதை தொடர்ந்து மைக்ரோசாப்ட், டெக் மகிந்திரா போன்ற நிறுவனங்கள் கேரளாவுக்கு வருவதற்கான அறிகுறி இருப்பதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு கேரளாவில் நடந்த ஒரு கிறிஸ்துமஸ் இரவு விருந்தில் நிஸ்ஸான் தலைமை தகவல் அதிகாரி ஆண்டனி தாமஸ் பங்கேற்றார். இங்கிருந்து தான் கேரளாவில் நிஸ்ஸான் நிறுவனம் தொடங்குவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த தாமஸ், கல்லூரி பருவத்தில் இங்கு இடதுசாரி மாணவர் அமைப்பின் பிஆர்ஓ.வாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் மூலமும் சில முயற்சிகள் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாஜக சுற்றுலா துறை அமைச்சர் அல்போன் கண்ணன்தனமும் நிஸ்ஸான் குழும பிரதிநிதிகளுடன் ஒரு நாள் காலை உணவில் கலந்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் ஜப்பானியர்களுக்கு முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் இருந்து மீன் குழம்பு விருந்து பரிமாற்றப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 8 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கேரளா ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு நிஸ்ஸான் நிறுவனத்தை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.