திருவனந்தபுரம்

கேரளாவில் மது வாங்க மதுப்பிரியர்களுக்கு விசேஷ அனுமதி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே ஒருவர் மட்டும் உயிர் இழந்துள்ளார்.

ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த அங்குள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரை டஜன் பேர் பலியாகி விட்டனர்.

அவர்கள் அனைவருமே குடிக்க முடியாததால் தற்கொலை செய்துள்ளனர்.

வழக்கமாகத் தினமும் குடித்துப் பழக்கப்பட்ட குடிகாரர்களுக்கு –

குடிக்காவிட்டால் உதறல் ஏற்படுகிறது.மருத்துவ பாஷையில் இதனை ‘வித்டிராவல் சிம்டம்’ என்று அழைக்கிறார்கள்

அதனால் ஏற்படும் எரிச்சல் மற்றும் விரக்தி அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

குடிநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க- அந்த மாநிலத்தில் ஏராளமான  போதை மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இருந்தும், தற்கொலையைத் தடுக்க முடியவில்லை.

‘டாக்டர்கள் ‘பிருஷ்கிருப்ஷன்’ இருந்தால், குடிமகன்களுக்கு  மது வழங்கலாம்’’ என மது சப்ளை செய்யும் கலால் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதற்கு அங்குள்ள டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் குடிமகன்களுக்கு மது வழங்க புதிய திட்டத்தை அமல் படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒருவருக்கு ‘வித்டிராவல் சிஸ்டம்’ உள்ளது என்று அரசு மருத்துவமனை டாக்டர் சான்றிதழ் கொடுத்தால், அந்த சான்றிதழை அருகேயுள்ள கலால் துறை அலுவலரிடம் குடிநோயாளி சமர்ப்பிக்க வேண்டும்.

டாக்டரின் சான்றிதழுடன், ஆதார் அல்லது ஏதாவது அடையாள சான்றிதழையும் (புரூஃப்)இணைக்க வேண்டும்.

அதனைப் பரிசீலித்து –சம்மந்தப்பட்ட குடிமகன்களுக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ வழங்கப்படும்.

அந்த பாசை வைத்து, கலால் துறை மூலம் மது பாட்டில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு எந்த ரூபத்தில் எதிர்ப்பு வரும் என்று தெரியவில்லை.

-ஏழுமலை வெங்கடேசன்