கேரள மாநில வரலாற்றில் இப்போது போல் எப்போதும் மதுபான கடைகள் ஒட்டு மொத்தமாக அடைக்கப்பட்டதில்லை.

சாப்பாடு போல் மூன்று வேளையும் சரக்கு அருந்திய அங்குள்ள குடிமகன்கள் பலர் – பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டனர்.

அவர்களுக்காக , அங்குள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் -போதை மறுவாழ்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

பலர் மன நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்-
மது கிடைக்காத எரிச்சலில் குடிமகன்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமையும் தொடர்கிறது.

செய்தி கேள்விப்பட்டு பதறிப்போனார், கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன்.
‘’ டாக்டர்கள் ‘பிரிஷ்கிரிப்ஷன் ‘ இருந்தால், குடிமகன்களுக்கு மது வழங்க வேண்டும்’’ என்று அவர் கலால் துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

மது அடிமைகளுக்கு மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கவும் பினராயி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அதை அவர் நிறைவேற்றமுடியாதபடி இப்போது இந்தின் மெடிக்கல் கவுன்சில் செக் வைத்துள்ளது.

மது குடிக்காததால் அவதிப்படுபவர்களுக்கு அறிவியல்பூர்வமாக தான் மருத்துவ சிகிச்சை தரவேண்டும். மருத்துவமனையில் வைத்தோ அல்லது வீட்டில் வைத்தோ அப்படிப்பட்ட சிகிச்சையை தரலாம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது அந்த அமைப்பு…

மது அடிமையானவர்களுக்கு மதுபானம் கொடுக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக ஏற்புடையது அல்ல என்பதால் மருத்துவர்கள் பரிந்துரை செய்யக்கூடாது என்றும் அப்படி யாராவது பரிந்துரை செய்தால் அவர்களின் மருத்துவ தொழில் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கழகத்தின் கேரள அமைப்புக்கு இதனை தெளிவுபடுத்தியுள்ளோம். என்றும் இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது,

இதனால் சாமி வரம் கொடுத்தும் பூஜாரி தடுத்த கதையாக போயுள்ளது, கேரளாவில் உள்ள மது அடிமையாளர்களின் நிலை..

– லட்சுமி பிரியா