திருவனந்தபுரம்

க மாணவரை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் மாணவர் தலைவர் வீட்டில் பல்கலைக்கழக விடைத்தாள்கள் சிக்கி உள்ளன.

கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கமான எஸ் எஃப் ஐ தலைவர் சிவரஞ்சித் என்பவர் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்லூரியில் மாணவர்கள் இடையே நடந்த தகராறில் மூன்றாம் வருட மாணவர் அகில் என்பவரை சிவரஞ்சித் நெஞ்சில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அதை ஒட்டி இவரும் மற்றும் இதே  இயக்கத்தை சேர்ந்த 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சிவரஞ்சித் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவருடைய வீட்டில் கேரள பல்கலைக் கழக விடைத்தாள்கள் 16 கட்டுக்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு சில எழுதாமலும் சிலவற்றில் விடைகள் எழுதப்பட்டும் காணப்பட்டுள்ளன. இதை ஒட்டி காவல்துறையினர் சிவரஞ்சித் தனது பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றுள்ளதாக சந்தேகம் கொண்டுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களை மிரட்டி இந்த விடைத் தாள்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பீருக்கலாம் என்னும் கோணத்திலும் மாணவர்களை மிரட்டி இந்த விடைத் தாட்களில் விடைகளை எழுதி வாங்கி இருக்கலாம் என்னும் கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இவர் வீட்டில் இருந்து கல்லூரியில் சீல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த விடைத்தாள்கள் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள்கள் ஆகும்.

சிவரஞ்சித் ஆயுதப் பாதுகாவலர் படையில் சேரும் தேர்வில் 92% மதிப்பெண்கள் பெற்று காசரகோட் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த தேர்விலும் இவர் முறைகேடு செய்திருக்கலாம் என விசாரணை நடந்து வருகிறது. இந்த தேர்வு கேரள அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு விடைத்தாள்கள் பிடிபட்டுள்ளது எதிர்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்கட்சியினர் கேரள பல்கலைக்கழகம் மற்றும் கேரள அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுக்ள் மீது தாங்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என அவர்கள் கூறி உள்ளனர்.

இந்த கத்திக் குத்து சம்பவத்தில் கைது செய்யபட்ட ஆறு மாணவர்கள் உட்பட 30 பேர் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. இவ்ர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கமான எஸ் எஃப் ஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்கள். இவர்க்ளைத் த்விர வேறு சில மாணவர் அல்லாதோரும் இந்த தகராறில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சிவரஞ்சித் மற்றும் நசீம் ஆகிய இருவர் மீது கடந்த டிசம்பர் மாதம் காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது