கேரளா: முதல்வராகிறார் விஜயன்.. கூட்டத்தைவிட்டு வெளியேறினார் அச்சு

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி வென்றதை அடுத்து,   சி.பி.எம். கட்சியின் பினராயி விஜயன் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இதற்கான கூட்டம் நடந்தபோது, அவரது உட்கட்சி எதிரியான அச்சுதானந்தன் கோபத்தில் வெளியேறினார்.
140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமயிலான  இடது சாரி கூட்டணி 91 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. ( கேரளாவில் ஆட்சி அமைக்க 71 இடங்களே போதுமானது. )
மார்க்சிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான வி.எஸ். அச்சுதானந்தன் மலம்புழா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சி.கிருஷ்ணகுமாரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டார்.
மார்க்சிஸ்டு கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரான பினராயி விஜயன் தர்மாடம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திவாகரனை 36 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில்  வென்றார்.
இதையடுத்து  இடதுசாரி கூட்டணியில் முதல்–மந்திரியாக வி.எஸ். அச்சுதானந்தன் அல்லது  பினராயி விஜயன் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்  திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இடதுசாரிகள் கூட்டணியின் முதல்-மந்திரியாக பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்,   அச்சுதானந்தன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
பினராயி விஜயன் - அச்சுதானந்தன்
பினராயி விஜயன் – அச்சுதானந்தன்
பாலக்காட்டில் நேற்று நிருபர்களிடம் பேசிய வி.எஸ்.அச்சுதானந்தன், “சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் இடதுமுன்னணி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது   மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 3½ கோடி மக்கள் இடதுமுன்னணி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்கள் அனுமதி கொடுத்தால் முதல்–மந்திரி பதவியை ஏற்க தயார்”  என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலைியில் பினராய் விஜயன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது அச்சுதானந்தனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஏற்கெனவே கேரள முதல்வராக ப தவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.