கேரளாவில் சட்டப்படி நடைபெற்ற முதல் திருநங்கை, திருநம்பி திருமணம்!

திருவனந்தபுரம்:

கேரளாவில் முதன்முறையாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மூன்றாம் பாலினத்தவர்களிடையே திருமணம் நடைபெற்றது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கேரளாவில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள், திருநம்பிகள் திருமணத்திற்கு அனுமதி உள்ளது.

இந்நிலையில், இஷான் என்ற இஸ்லாமியருக்கும், சூர்யா என்ற உயர்ஜாதி இந்துக்கும் இடையே அவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

சூர்யா சில  மலையாள  தொலைக்காட்சி தொடர்களிலும்  மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவர். இவருக்கும், அதே மாநிலத்தைச்  சேர்ந்த இஷானுக்கும் இடையே நீண்ட காலமாக காதல் மலர்ந்திருந்தது.  இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக  மாறியவர். இவர் தனது மனைவியாக  சூர்யா வந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணி சம்மதம் கேட்க, சூர்யாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து இருவரின் பெற்றோர்களும் பேசி முடித்து, உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை கோலாகலமாக நடத்தினர். அதைத்தொடர்ந்து  இருவரும் தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்துள்ளனர்.

இந்த திருமணம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில்  இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.