ஆதரவற்ற சிறுவனுக்கு சிறுநீரக தானம் செய்த கேரள பெண்மணி

கொச்சி

பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம் வயதில் பெற்றோரை இழந்தவர் ஆவார்.   அவர் தனது பாட்டியுடன் பாலக்காட்டில் உள்ள பள்ளத்துருத்தியில் படித்து வந்தார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென எடை அதிகரித்து கால்கள் மற்றும் முகம் வீங்கத் தொடங்கியது.   காலை எழுந்ததும்  பார்வை மங்கியது.  எனவே அவர் பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார்.

அங்கு அவருடைய சிறுநீரகம் பழுதடைந்ததால் கழிவுகள் வெளியேறாமல் இந்த நிலை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.  அவர் தொடர்ந்து 6 மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  இதனால் அவருடைய படிப்பு நின்று போனது.  சிகிச்சைக்கு பிறகும் அவர் உடல்நிலை மேலும் சீர் கெட்டது.  அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.  அவருக்கு உடனடியாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிறுநீரகம் மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் பைஜு என்பவர் தயா என்னும் ஆதரவற்றோருக்கு உதவும் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.  அவர் ஜெயகிருஷ்ணனுக்கு டயாலிசிஸ் செய்துக் கொள்ளப் பணம் அளிக்க வந்தார்.  அப்போது ஜெயகிருஷ்ணனுக்கு சிறுநீரக மாற்று அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.  அவர் தனது நிறுவனத்திடம் விவரத்தைத் தெரிவித்து அவர்கள் ஜெயகிருஷ்ணனின் உறவினர்களிடம் சிறுநீரக தானம் குறித்துப் பேச முற்பட்டுள்ளனர்.

ஜெயகிருஷ்ணனுடைய உறவினர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாததுடன் ஜெயகிருஷ்ணனை வீட்டை விட்டு அனுப்பி உள்ளனர்.  அவரை அந்த நிறுவன உறுப்பினர் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றார். அந்த உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் நிலை குறித்து முகநூலில் பதிவிட்டர்.  அதைப் படித்த 47 வயதான சீதா தம்பி என்பவர் தனது சிறுநீரகத்தை அளிக்க முன் வந்தார்.

கொச்சி நகரில் இருந்த ஜெயகிருஷ்ணனை தனது கணவர் திலீப் தம்பியுடன் சந்தித்த சீதா இதை உறுதி செய்தார்.  திலீப் தன் மனைவியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.  அதன் பிறகு பல  பரிசோதனைகள் நடந்துள்ளன.  கிட்டத்தட்ட 6 மாதங்கள் இந்த சோதனைகள் மற்றும் அதிகாரப் பூர்வ ஒப்புதல்களுக்கான பணிகள் நடந்த பிறகு இந்த மாதம் 10 ஆம் தேதி சீதாவின் சிறுநீரகம் ஜெயகிருஷ்ணனுக்கு மாற்றப்பட்டது.

இந்த மருத்துவ செலவுகளுக்குத் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டி அதன் மூலம் செலவு செய்துள்ளது.  கடந்த சனிக்கிழமை அன்று ஜெயகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது சீதாவும் அவருடன் இருந்து அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜெயகிருஷ்ணனுக்கு பெற்றோர்கள் இல்லாததால் தனிமையில் துயர் அடையக்கூடாது என்பதற்காக அவரை அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

அறுவைக்கு பிந்தைய சிகிச்சைக்காக இன்னும் மூன்று மாதம் கொச்சியில் ஜெயகிருஷ்ணன் தங்க வேண்டி வரும்.  அதன் பிறகு மீண்டும் தனது கல்வியை தொடர உள்ளதாக ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   அவருக்குப் பாலக்காட்டில் தயா தொண்டு நிறுவனம் ஒரு வீட்டைக் கட்டி தர உத்தேசித்துள்ளது.   இதற்கு உதவி செய்யவும் தயார் என சீதா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

You may have missed