வரதட்சிணை கொடுமை – பட்டினிப்போட்டு கொல்லப்பட்ட பெண்!

கொல்லம்: வரதட்சிணை கொடுமையால் பாதிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே இறந்த துஷாரா என்ற 27 வயது பெண்ணின் எடை 20 கிலோ மட்டுமே இருந்துள்ளது.

கொல்லம் மாவட்ட மருத்துவமனைக்கு, மிகவும் பலவீனமான நிலையில் 27 வயதுடைய பெண் ஒருவர் கொண்டுவரப்பட்டார். ஆனால், மருத்துவமனையை அடைந்தபோது அவர் இறந்திருந்தார். அவர் 2 குழந்தைகளின் தாய்.

அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை பல சந்தேகங்களைக் கிளப்பி, அதிகாரிகளை விசாரணைக்குத் தள்ளியது.

அதனடிப்படையில் அறியப்படுவதாவது; கொல்லம் மாவட்டம் ஒயூர் என்ற ஊரைச் சேர்ந்த அப்பெண், வரதட்சிணைப் பிரச்சினையால், தனது கணவர் மற்றும் உறவினர்களால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலிலிருந்த தழும்புகள் அதை உறுதிப்படுத்தின. ஒரு தனியறையில் அடைத்து வைக்கப்பட்ட அப்பெண்ணுக்கு, வெறும் சர்க்கரை நீரும், ஊறவைத்த அரிசியும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலை பலநாட்கள் நீடித்துள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற குற்றத்திற்காக, அப்பெண்ணின் கணவரும், மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அந்தப் பாவப்பட்ட பெண்ணின் 2 குழந்தைகளும், குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அண்டை வீட்டார்கள் பலர் தங்களின் வாக்குமூலத்தை காவல்துறையிடம் அளித்துள்ளனர்.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.

You may have missed