இருந்தபோது ஏராளமான பேருக்கு வாழ்வு… இறந்த பிறகு எட்டு பேருக்கு வாழ்வு

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித்.  இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துவந்தார. லாக்டவுன் காரணமாக டிரைவர் வேலைக்குச் செல்ல முடியாததால் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்மேனாக பணி செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி கொட்டாரக்கரைக்கு அருகில் பைக்கில் அனுஜித் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உயிரைக் காக்க மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் கடந்த 17-ம் தேதி அனுஜித் மூளைச்சாவு அடைந்தார்.

இரண்டு முறை டெஸ்ட் எடுத்து அவரது மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பிறகு அவரது மனைவி பிரின்ஸி, சகோதரி அஜல்யாவும் உடல் உறுப்புதானம் செய்வதற்குச் சம்மதித்தனர். கேரள முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல துறைகளுடன் ஆலோசித்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அனுஜித்தின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கை எலும்புகள், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகள் எட்டு பேருக்குப் பொருத்தப்பட்டன.

துக்கத்திலும் பிறருக்கு உதவிய அனுஜித்தின் பெற்றோருக்குக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா  ஆறுதல் கூறியுள்ளார். இதுபற்றி சைலஜா டீச்சர் கூறுகையில், “அனேகம் பேரைக் காப்பாற்றி முன்மாதிரியாக வாழ்ந்தவர் அனுஜித். அவரை பிரிந்து வருந்தும் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அனுஜித்தின் மனைவி பிரின்ஸி தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். அம்மா விஜயகுமாரி, அப்பா சசிதரன் பிள்ளை ஆகியோர் அடங்கிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுஜித்.

மறைந்த பின்னரும் பிறருக்கு வாழ்வளித்த அனுஜித் யார் தெரியுமா? 17 வயதிலேயே நூற்றுக்கணக்கானோரை ரயில் விபத்திலிருந்து காப்பாற்றியவர்.  ஆம்.அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த போது சக மாணவர்களுடன் ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அதே நேரத்தில் அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தகப் பையைத் தூக்கிப் பிடித்தபடி தண்டவாளத்தில் ஓடினார். சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்துகொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது நடந்தது 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி.

17 வயதில் மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித் தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.

இறைவனின் படைப்பில் ஒரு சிலரின் வாழ்வு என்பது பிறருக்கு உதவுவதற்கே என்று அமைந்ததாக இருக்கும் போலிருக்கிறது,

– லட்சுமி பிரியா