கொச்சி

கேரளாவைச் சேர்ந்த 39 வயது இளைஞர் கெல்வின் ஜாய் என்பவர் மரணம் அடையும் போது உடல் உறுப்புக்களை 8 பேருக்கு தானம் செய்துள்ளார்.

ஒருவர். இறந்த பிறகு மண்ணோ அல்லது நெருப்போ அழிக்கும் உடல் உறுப்புக்களால் மற்றவர் உயிர் பிழைக்க முடியும்.   அவருடைய கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், குடல் மற்றும் கைகள் எனப் பல உறுப்புக்களைத் தானமாக வழங்கி மற்றவர் உயிரைக் காக்க முடியும்.    எனவே உலகெங்கும் உடல் உறுப்பு தானம் வழங்கக் கோரிக்கை எழுந்து வருகிறது.  மேலும் மரணத்துக்குப் பிறகும் உடல் உறுப்புக்கள் தானத்தின் மூலம் உயிர் வாழ  முடியும்.

கேரள மாநிலத்தில் வடக்கு பரவூர் பகுதியைச் சேர்ந்த வி ஆர் ஜாய் மற்றும் மார்கரெட் ஜாய் ஆகியோரின் மகன் கெல்வின் ஜாய்.   சுமார் 39 வயதாகும் இவர் கடந்த புதன்கிழமை அன்று ஒரு விபத்தில் படுகாயம் அடைந்து கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சனின்ச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவர் சனிக்கிழமை அன்று மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டார்.

அவருடைய உடல் உறுப்புக்கள் கேரள அரசின் உடல் உறுப்பு தான திட்டமான மிரிதசஞ்சீவி திட்டத்தின் மூலம் கொடையாக அளிக்கப்பட்டது.  அவருடைய கைகள், இதயம், சிறு குடல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டன.

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு அவரது இரு கைகளும் பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் இதயம், சிறு குடல், கல்லீரல், கண்கள் ஆகியவை 5 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன.  அவரது சிறுநீரகங்கள் கொச்சி லூர்ட்ஸ் மருத்துவமனை மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என இரு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இதுவரை ஒருவருடைய உறுப்புக்கள் ஆறு பேருக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக எட்டு பேருக்கு ஒருவருடைய உடல் உறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன.