கேரளா எலி காய்ச்சல் பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு
திருவனந்தபுரம்:
கேரளாவில் எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த 15-ம் தேதி முதல் எலி காய்ச்சல் என்ற தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்கள் மூலமும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய் பரவியுள்ளது.
எலி காய்ச்சல் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த 842 பேரில் 372 பேருக்கு இந்த நோய் தாக்கியிருப்பது உறுதியானது. தற்போது நோய் தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை எலி காய்ச்சலுக்கு 55 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். எலி காய்ச்சல் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.