கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி அசிரியை ஓய்வு பெற உள்ளார்

லப்புரம், கேரளா

கேரள மாநிலத்தின் முதல் பிராமண வகுப்பைச் சேர்ந்த அரேபிய மொழி ஆசிரியை கோபாலிகா வரும் மார்ச் மாதம் பணி ஓய்வு பெறுகிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குன்னங்குளம் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் கோபாலிகா.  பிராமண வகுப்பைச் சேர்ந்த அவர் குடும்பத்தினர் கொட்டியூர் கோவிலின் பரம்பரை அர்ச்சகர்கள் ஆவார்கள்.  அவருக்கு பல மொழிகளைக் கற்பதில் ஆர்வம் இருந்தது.  பள்ளியில் சமஸ்கிருதம்  படித்துள்ளார்.  தனது17 ஆம் வயதில் கோபாலிகா அரேபிய மொழியை கற்றுக் கொள்ள விரும்பி உள்ளார்.

அவரது ஊரில் அரேபிய மொழி கற்றுத் தரும் கல்வி நிலையம் இருந்ததால் அங்கு சேர அவர் விரும்பினார்.   அந்தக் கிராமத்தில் பல்வேறு சாதியினரும் வசித்து வந்தனர்.  அங்கு மத வித்தியாசம் இல்லை.  எனவே இவர் அரேபிய மொழியைக் கற்கத் தொடங்கி உள்ளார்.   அவருடன் பல்வேறு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் படித்துள்ளனர்.  ஒரு சில பிராமண மாணவர்களும் பயின்ற போதும் யாரும் ஆசிரியர் பணியைச் செய்யவில்லை.

கோபாலிகா கேரள மாநிலத்தின் முதல் பிராமண அரேபிய மொழி ஆசிரியையாகப்  பணி புரிந்துள்ளார்.    கடந்த 1987 ஆம் வருடம் அவர் நாராயணன் நம்பூதிரி என்பவரை மணந்து மலப்புரம் மாவட்டத்துக்கு வந்துள்ளார்.  அங்கும் அவர் அரேபிய மொழி ஆசிரியையாக பணியைத் தொடர்ந்துள்ளார்.  ஆனால் ஆனால் அவர் ஒரு பிராமணர் என்பதால் அவருக்கு கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.

எனவே அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 1989 ஆம் வருடம் வெற்றி கண்டுள்ளார்.  அதன் பிறகு கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் மலப்புரத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் பணி புரியத் தொடங்கி உள்ளார்.   அப்போது இந்த நிகழ்வு மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆயினும் அவருடைய கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் ஆதரவுடன் அவர் தனது பணியைத் தொடர்ந்துள்ளார்.

அதன் பிறகு அதிக சிரமமின்றி தனது பணியை கோபாலிகா தொடர்ந்துள்ளார்.  தற்போது அவர் வரும் மார்ச் 31 ஆம் தேதி அதாவது இந்த கல்வி ஆண்டுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.  கடந்த வருடம் ஒரு இஸ்லாமிய அமைப்பு உலக அரேபிய மொழி தினத்தை முன்னிட்டு அவருக்கு விருது அளித்துள்ளது.   தன்னிடம் சாதி மத பாகுபாடின்றி பலரும் தற்போது அரேபிய மொழியைக் கற்றுக் கொண்டு அந்நாடுகளில் பணி புரிவதாக கோபாலிகா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.