திருவனந்தபுரம்

கேரள மாநில மூத்த அரசியல்வாதியும் முதல் பெண் அமைச்சருமான கே ஆர் கௌரி அம்மா இன்று மரணம் அடைந்தார்.

கேரளாவின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா. சேர்த்தலா பட்டணங்காடு பகுதியில் 1919 ஜூலை 14-ம் தேதி கெளரி அம்மா பிறந்தார். இவர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்று ஈழவ சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றவர். தனது 28 வயதில் இருந்து தீவிர கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை கடைப்பிடித்து வந்த இவர். சிறை வாசம், காவல்துறையின் கொடுமைகள் என ஆரம்பக்காலத்திலேயே மிகக்கடுமையான துயரங்களைச் சந்தித்தார்.

இவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஆறு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்..நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த சமயத்தில் அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் ஜனாதிபத்ய சம்ரக்‌ஷண சமிதி என்ற கட்சியைத் தொடங்கி அக்கட்சியின் தலைவராக இருந்தவர் பிறகு பொதுச்செயலாளர் ஆனார். 2001 முதல் 2006 வரையிலான உம்மன்சாண்டி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து விவசாயத்துறை அமைச்சராக இருந்தார்.

கேரள மாநிலத்தின் முதல் பெண் அமைச்சர் கெளரி அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் டி.வி.தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் அம்மா.  கடந்த 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்த சமயத்தில் கே.ஆர்.கெளரி அம்மா சி.பி.எம் கட்சிக்கும், அவரது கணவர். டி.வி.தாமஸ் சி.பி.ஐ-க்கும் சென்றனர்.  பிறகு அவர் தனது கணவரைப் பிரிந்தார்.

 கேரள மாநில அரசியலில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட கே.ஆர்.கெளரி அம்மா தொற்று நோயால் அவதிப்பட்டு, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவருக்கு 102 வயது ஆகிறது.