ஏழைகளுக்கு இலவச இண்டர்நெட்: டிசம்பரில் தொடக்கம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏழைகளுக்கு இலவசமாக இண்டர்நெட் வசதி வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக கேரளாவில் 3 கோடியே 50 லட்சம் மக்களுக்கு இலவச இணைய வசதியை ஏற்படுத்தி தர போவதாகவும் இணைய பயன்பாட்டை மனித உரிமையாக கருத வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

இப்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் கூட்டமைப்பின் நிறுவன தலைவர்களுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது: இணையத்தை குடிமகனின் அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் கேரளா. இதன் ஒரு பகுதியாக, தரமான இணையத்தை ஏழைகளுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு மலிவு விலையிலும் வழங்குவதற்காக இத் திட்டம் தொடங்கப்பட்டது.

வேறு எந்த மாநிலமும் இந்தியாவில் ஒரு திட்டத்தை செயல்படுத்தியது இல்லை. லாக்டவுன் காரணமாக தாமதம் இருந்தபோதிலும், கூட்டமைப்பின் தலைவர் கவுதம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தை முடிப்பதாக உறுதியளித்துள்ளார்.

பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இலவசமாக இணைய இணைப்பு வழங்கும் என்பதால் இந்த திட்டம் மாநிலத்திற்கு பெரும் நன்மை பயக்கும்.

கல்வி மற்றும் வங்கி போன்ற துறைகளில் இணையத்தின் பயன்பாடு பெரிதும் அதிகரிக்கும். கேரளாவை உலகின் முன்னணி தொழில்துறை, கல்வி மற்றும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த திட்டம் ஒரு பெரிய ஆதரவாக இருக்கும் என்று பினராயி விஜயன் கூறினார்.