கேரளா சுற்றுலா தொழிலை வீழ்த்திய ஜி.எஸ்.டி

திருவனந்தபுரம்:

கேரளாவில் பெரும் பண புழக்கத்தை ஏற்படுத்தி வந்த சுற்றுலா துறை ஜிஎஸ்டி.யால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. 33 சதவீத வரி உயர்வால் அங்குள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதிகள் பாதித்துள்ளன.

ஜிஎஸ்டி.யில் ஏசி வசதி இல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீதமும். மதுபான உரிமத்துடன் கூடிய ஏசி ஓட்டல்களுக்கு 18 சதவீதமும், 5 நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

2016ம் ஆண்டு கேரளாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 419ஆகும். இதற்கு முந்தயை ஆண்டு 97 லட்சத்து 7 ஆயிரத்து 479 என இருந்தது. உள்ளூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5.67 சதவீதம் உயர்ந்து ஒரு கோடியே 31 லட்சத்து 72 ஆயிரத்து 535 என்ற நிலையில் வளர்ச்சி அடைந்திருந்தது. 2016ம் ஆண்டில் அந்நிய செலாவணி மூலம் 7 ஆயிரத்து 750 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

‘‘சுற்றுலா துறையை கொன்றுவிட்டது ஜிஎஸ்டி’’ என்று கேரளாவில் 12க்கும் மேற்பட்ட 5 நட்சத்திர ஓட்டல்களை நடத்தி வரும் ஜோஸ் டோமினிக் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘ சுற்றுலா தொழில் தற்போது 33 சதவீத வரி விதிப்பை சந்தித்துள்து. இது முழுவதும் சுற்றுலா ஆபரேட்டர்கள் தலையில் தான் விடிகிறது. தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுலாவுக்கு 7 முதல் 12 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இலங்கையில் 16 சதவீதம் விதிக்கப்படுகிறது. கேரளா மட்டுமின்றி ராஜஸ்தான், கோவா, ஓடிசா போன்ற மாநிலங்களில் சுற்றுலா துறை மோசமாக பாதித்துள்ளது.

கேரளாவில் 4 புதிய வேலைவாய்ப்புகளில் ஒன்று சுற்றுலா தொழிலில் உருவாகும். வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கேரளா சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்தது. ஏற்கனவே விமான டிக்கெட் கட்டணம் கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அடுத்து ஜிஎஸ்டி சுற்றுலாவுக்கு சாவு மணி அடித்துவிட்டது. சரியான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லை என்றால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து கேரளாவுக்கு மட்டுமின்றி இந்த நாட்டிற்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என்றார்.

கேரளா சுற்றுலா தொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நாராயணன் கூறுகையில், ‘‘33 சதவீத வரி விதிப்பு என்பது 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமின்றி ரூ. 7 ஆயிரத்து 500க்கு மேல் வாடகை நிர்ணயம் செய்துள்ள அறைகள் கொண்ட அனைத்து ஓட்டல்களுக்கும் பொருந்தும். 3 அல்லது 4 நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களுக்கும் இந்த 33 சதவீத வரி வதிக்கப்படுகிறது. கேரளாவில் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை தான் சுற்றுலா சீசன்.

ஒவ்வொரு சொகுசு விடுதிக்கு என்று தனித்தனியாக கட்டணம் உள்ளது. அதனால் அனைத்து வகையான முன்னணி ஓட்டல்களும் இதில் பாதிக்கும். ஆயுர்வேத மருத்துவமனை என்ற அடிப்படையில் ஆயுர்வேத சொகுசு விடுதிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ’’ என்றார்.

இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தென்னிந்தியா பிரிவு மண்டல தலைவர் நஜீப் கூறுகையில், ‘‘
இப்பிரச்னை குறித்த பிரதமர் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்து கூறப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நினைத்தோம்.

ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. எங்களது தொழில் பாதிப்பை சந்திக்க தொடங்கிவிட்டடது. சுற்றுலா பயணிகள் செலவு செய்ய தயங்குகிறார்கள். சுற்றுலா தளத்தை தேர்வு செய்வதில் கட்டணம் மிகப்பெரிய பங்கு வகிக்கும்’’ என்றார்.