கலப்புத் திருமண இணையர்களுக்கு கேரளாவில் சூப்பர் திட்டம்..!

திருவனந்தபுரம்: கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்கள், தங்களை எதிர்ப்போரிடமிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து காத்துக்கொண்டு வாழ ‘பாதுகாப்பு இல்லம்’ என்ற திட்டம் கேரள அரசால் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கலப்புத் திருமண ஜோடிகளுக்கான புதிய திட்டம் குறித்து, கேரள சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளதாவது, “வேறு வகுப்பு மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்வோருக்கு, கேரள அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

அவர்கள் பொதுப் பிரிவினராக இருந்து, ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், ரூ.30 ஆயிரம் தரப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜோடிக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்கள், ஓராண்டு வரை அச்சமின்றி தங்கிக் கொள்வதற்கு, ‘பாதுகாப்பு இல்லம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய இல்லங்கள் ஏற்படுத்தப்படும்.

வேறு வகுப்பு அல்லது மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்வோர், இந்த இல்லங்களில் அச்சமின்றி வாழலாம்” என்றார் அமைச்சர்.

கடந்த 2018ம் ஆண்டு, கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உயர் ஜாதி பெண்ணை திருமணம் செய்த, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்துவ இளைஞரை, அப்பெண்ணின் குடும்பத்தினர் கடத்திச் சென்று கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.