புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, சட்டத்திற்கு முரணாக, தன் பெயரின் பின்னால், தன் குருவின் பெயரையும் இணைத்து பதவியேற்க முனைந்த பாரதீய ஜனதாவின் சர்ச்சைக்குரிய மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா தாக்கூரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களான ராஜ்மோகன் உன்னிதன், ஹிபி ஈடன், டி.என்.பிரதாபன், தீன் குரியாகோஸ் மற்றும் பென்னி பெஹனன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் ஆகியோர், பிரக்யா தாகூரின் தவறை சுட்டிக்காட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

இதனையடுத்து, மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பதவி வகித்த வீரேந்திர குமார், ஆவணங்களை சரிபார்க்குமாறு உத்தரவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பிரக்யா சிங் தாகூர் என்ற அவரின் உண்மையான பெயரிலேயே பதவிப் பிரமாணம் எடுக்க வைக்கப்பட்டது.

தன் குருவின் பெயரான சுவாமி பூர்ண சேத்னானந்த் அவ்தேஷனந்த் கிரி என்ற பெயரை, தனது பெயருக்குப் பின்னால் சேர்த்து பதவியேற்க முயன்றார் தீவிரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட போபால் தொகுதி உறுப்பினர் பிரக்யா தாகூர். ஆனால், விதிமுறைப்படிதான் அனைத்தும் நடைபெற வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரக்யாவின் திட்டம் தோல்வியடைந்தது.